பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியில் புதிய கணக்குகள் தொடங்குவதை நிறுத்தி வைக்குமாறு அந்நிறுவனத்துக்கு ஆர்.பி.ஐ உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கே.ஒய்.சி நடைமுறைகளில் விதிமீறல் இருப்பதாக சந்தேகத்தில் ஆர்.பி.ஐ இந்த உத்தரவிட்டுள்ளாதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஜூன் 20-ம் தேதி தணிக்கை ஒன்றையும் பேடிஎம் நிறுவனத்தில் நடத்தியது ஆர்.பி.ஐ. அன்றில் இருந்து பேடிஎம் வங்கியில் புதிய கணக்குகள் திறக்கபடுவதில்லை என்று கூறப்படுகிறது. கடந்த மாதம், சாஃப்ட் பேங்க், பேடிஎம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஜப்பானில் பேமென்ட் சேவை தொடங்க இருப்பதாக அறிவித்தது. சமீபத்தில் 20 நாடுகளுக்கான அந்நிய செலாவணி வர்த்தகத்தை தொடங்கியது பேடிஎம். பேடிஎம்மின் இந்த அறிவிப்பையொட்டி, ஆர்.பி.ஐயின் உத்தரவும் வந்துள்ளது.
பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக ரேணு சாட்டி எப்படி பொருந்துவார் என்றும் கேள்வி எழுப்பியது ஆர்.பி.ஐ. விதிகளின் படி வங்கித் துறை பின்னணி கொண்டவர்களே வங்கி சேவைகளின் தலைவராக இருக்க வேண்டும். ஆர்.பி.ஐயின் கேள்விக்கு பிறகு ரேணு சாட்டி பதவியை ராஜினாமா செய்தார். இப்போது அவர் பேடிஎம் சில்லரை வணிக துறையின் சி.ஓ.ஓ ஆக இருக்கிறார்.
அதுமட்டும் இல்லாமல், பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி செயல்பாடுகளை ஆராய்ந்த ஆர்.பி.ஐ, வாடிக்கையாளர்களின் டேட்டாவை இன்னும் பாதுகாப்பான முறையில் சேமிக்க வேண்டும் என்றது. மேலும், பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கிக்கு என தனி அலுவலகம் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
தற்போது பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியில் நடப்பு கணக்கு சேவையை சேர்க்க இருப்பதால், கணக்கு தொடங்கும் நடைமுறையை நிறுத்தி வைத்திருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இது பற்றி நாங்கள் பேடிஎம் நிறுவனத்திடம் கேட்டிருக்கிறோம்.
பேமென்ட் வங்கிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது ஆர்.பி.ஐ. வாடிக்கையாளர்கள் அனுமதி இன்றி, ஏர்டெல் பேமென்ட்ஸ் கணக்கை திறந்த விதிமீறலுக்காக 5 கோடி ரூபாய் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்