கடந்த மாத இறுதியில் ஈபே இந்தியா (ebay india) தளத்தை மூடப்போவதாக அதன் தலைமைச் செயல் அலுவலர் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி அறிவித்தபோது, அதேபோன்ற ஒரு தளத்தை அறிமுகம் செய்யப்போவதாக பிளிப்கார்ட் (#Flipkart) நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி புதன் முதல் #2GUD (2gud.com) எனப் பெயரிடப்பட்ட இத்தளம் அறிமுகமாகி செயல்படத் தொடங்கியுள்ளது. பழைய மற்றும் பயன்படுத்தாமலேயே திருப்பியளிக்கப்பட்ட பொருட்களைப் புதுப்பித்து விற்பனை செய்யும் இவ்வணிகத்தில் முதன்முறையாக ப்ளிப்கார்ட் இறங்குகிறது. இன்னும் ஐந்து-ஆறு ஆண்டுகளில் இதன் சந்தை 1,39,740 கோடிகள் மதிப்புக்கு விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைக்குப் புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், டேப்லட்டுகள், மின்னணு சாதனங்கள் போன்றவை மட்டுமே 2குட் தளத்தில் விற்கப்படும். படிப்படியாக வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றையும் இத்தளம் விற்கத் தொடங்கும். www.2gud.com என்ற இணையமுகவரியில் இத்தளம் புதன் முதல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
“2குட் தளத்தில் விற்கப்படும் எல்லா பொருட்களும் முழுமையாக சோதித்த பின்பு, உரிய சான்றுகளுடனும் உத்தரவாதத்துடனும்தான் விற்கப்படும். பழைய பொருட்களை விற்கும் துறையில் தரத்தின் மீதான நம்பிக்கை சார்ந்த பிரச்சினைகள் தற்போது உள்ளன. இத்தளம் அதனை மாற்றி அமைக்கும். இத்தளத்தின் வாயிலாக வாங்கப்படும் பொருட்களுக்கு மூன்று மாதங்கள் முதல் ஓராண்டு வரை உத்தரவாதம் வழங்கப்படும். மேலும் நாடெங்கும் உள்ள சேவை மையங்களிலும் சர்வீஸ் செய்துதரப்படும்” என்று இத்தளம் குறித்து வால்மார்ட்டுக்குச் சொந்தமான ஃப்ளிப்கார்ட் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இப்போதைக்கு 2குட் தளத்தை மொபைல் இணையத்தில் மட்டுமே பயன்படுத்தமுடியும். விரைவில் கணினிக்கான இணைய இடைமுகமும், மொபைல் செயலிகளும் அறிமுகப்படுத்தப்படும். ஃப்ளிப்கார்ட்டிலிருந்து 2குட் முற்றிலும் தனித்தே இயங்கும். ஆகஸ்ட் 14 அன்று அதிகாரபூர்வமாக மூடுவிழா கண்ட ஈபே-இன் தலைமை அலுவலர், “இனி புதுப்பிக்கப்பட்ட பொருட்களை விற்கும் தளம் தொடங்கும்போது எங்களின் பாடங்களில் இருந்து கற்றுக்கொண்டு தொடங்கப்படும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“மிகப்பெரிய வாய்ப்புகளைக் கொண்டிருப்பினும் புதுப்பிக்கப்பட்ட பொருட்களை விற்கும் சந்தையானது மிகவும் சிதறியதாகவும், அமைப்பொழுங்கற்றதாகவும் இருந்து வருகிறது. இதனை ஃப்ளிப்கார்ட்டின் 2குட் மாற்றும். நல்ல அமைப்புக் கட்டுமானத்துடன் விற்பவர் வாங்குபவர் இடையே எந்த உரையாடலும் அற்ற, இருதரப்புக்கும் எளிய தளமாக இது இருக்கும்” ஃப்ளிப்கார்ட்டின் துணைத்தலைவரும் 2குட் தளத்துக்குத் தலைவருமான அனில் கோடேடி தெரிவித்துள்ளார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்