தனது பயன்பாட்டாளர்களின் நம்பிக்கைத்தன்மையினை சுழியத்திலிருந்து ஒன்று வரையிலான மதிப்புப் புள்ளிகளால் குறித்துவைத்து சோதித்துப் பார்க்க உள்ளது ஃபேஸ்புக். தவறான நபர்களை, கணக்குகளைக் கண்டறிவதற்கான வகைகளில் ஒன்றாக இது பயன்பட இருக்கிறது.
“தவறான தகவல்கள், பொய்ச்செய்திகளைக் கட்டுப்படுத்தும் தனது முயற்சிகளின் ஒரு பகுதியாக ஒருவரின் நன்மதிப்பினை அளவிட இந்தத் திட்டத்தை ஃபேஸ்புக் கையிலெடுத்துள்ளது” என்று அப்பொறுப்பிலுள்ள ஃபேஸ்புக்கின் தயாரிப்பு மேலாளர் டெஸ்ஸா லியோன்ஸ் தெரிவித்துள்ளார். பிற தொழில்நுட்பம்சார் நிறுவனங்களைப் போலவே ஃபேஸ்புக்கும், பிரச்சனைக்குரிய பதிவுகளைக் கண்டறிய பல காலமாகத் தனது பயனர்களையே நம்பி வந்தது. இதன் ஒரு பகுதியாகவே போலியான தகவல் என்பதைக் குறிப்பதற்கான, புகார் தெரிவிப்பதற்கான வழிமுறைகளை அது அறிமுகம் செய்தது. எனினும் அதில் ஒரு திருப்பம் ஏற்பட்டது.
அது குறித்து லியோன்ஸ், “ஒரு பதிவினோடு முரண்படுவதாலேயே அதை உள்நோக்கத்தோடு தவறானது, போலியானது என்று மக்கள் குறிப்பதும், ஒரு குறிப்பிட்ட நபருக்கு எதிராகத் தாக்குதல் நடத்த இதுபோல குறிப்பதும் சாதாரணமாக ஏற்படக்கூடியதுதான்” என்கிறார்.
“இப்போது அறிமுகமாகும் இந்த நம்பிக்கைத்தன்மை மதிப்புப் புள்ளிகளை மட்டுமே வைத்து ஒருவரை முழுமையாக எடைபோட முடியாது. மேலும் மேற்கூறியவாறு வேண்டுமென்றே சில பதிவுகள் தவறானவை என்று குறிக்கப்படும் அபாயத்தினைப் பற்றிப் புரிந்துகொள்ள நாங்கள் எடுத்துவரும் பல முயற்சிகளுள் ஒன்றே இந்த மதிப்புப் புள்ளிகள் திட்டம். இதனுடன் யார்யாரெல்லாம் தேவையின்றிப் பதிவுகளைப் போலி என்று குறிக்கின்றனர், யாருடைய பதிவுகள் நம்பத்தகுந்தன போன்றவற்றையெல்லாமும் பேஸ்புக் அலசிவருகிறது” என்றும் லியோன்ஸ் கூறினார்.
எனினும் எந்த வகையான திட்ட அளவைகளை எல்லாம் வைத்து ஒரு பயனருக்கு மதிப்புப் புள்ளிகள் அளிக்கப்பெறுகின்றன, எல்லா பயனர்களுமே இவ்வாறு மதிப்பிடப்படுகிறார்களா, இது எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகிறது போன்ற கேள்விகளுக்கு தெளிவான விடை இல்லை.
அண்மையில் நடந்த ரஷ்ய ஊடுருவல், தவறான தகவல் பரப்பல்கள், குறிப்பிட்ட கொள்கையாளர்கள் ஒரு நிறுவனத்தை அவர்களுக்கு ஏற்றவாறு துஷ்பிரயோகம் செய்துகொள்ளுதல் ஆகியவற்றை அடுத்து தொழில்நுட்ப நிறுவனங்கள் இதுவரை சோதிக்கப்படாத, பல புதிய படிமுறைத் தீர்வுகளைத் (algorithm) தேடத் தொடங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியே இந்த நன்மதிப்பு அளவீடு என்பது. மற்றொரு எடுத்துக்காட்டாக, ட்விட்டர் நிறுவனமானது ஒருவரது கணக்கில் பிறரது செயல்பாடுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு; அதைவைத்து ஒருவரது பதிவுகள் பரப்பத்தக்கனவா என்று ஆராய்ந்து வருகின்றது.
ஆனால் நம்பிக்கைத்தன்மையை ஆராயும் இவ்வழிமுறைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதில் பெரிதும் வெளிப்படையான தன்மை இல்லை. நிறுவனங்களும் அவற்றைப் பொதுவெளியில் ஆலோசிக்கத் தயங்குகின்றன. ஏனெனில் அவ்வாறு செய்தால் அதையும் தவறாகப் பயன்படுத்திவிடுவார்கள் என்ற அச்சம் நிலவுகிறது.
“ஃபேஸ்புக் எவ்வாறு நம்மை மதிப்பிடுகிறது என்பது தெரியாமல் இருப்பது சங்கடத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், அதைச் சொன்னால் அவர்களது படிமுறைத் தீர்வுகளின் ஓட்டைகளில் புகுந்து அவற்றை ஒன்றுமில்லாதாக்கிவிடும் அபாயமும் உள்ளது” என்கிறார் க்ளெய்ர் வார்டல். இவர் தவறான தகவலின் தாக்கத்தை ஆராயும் ‘First Draft’ என்ற ஹார்வார்ட் கென்னடி பள்ளியிலுள்ள ஆராய்ச்சியகத்தின் இயக்குநர் ஆவார். மேலும் பதிவுகளின் உண்மைத்தன்மையைக் கண்டறிவதில் ஃபேஸ்புக்குக்கு உதவியும் வருகிறார்.
ஏற்கமுடியாக் கருத்துகளைக் கொண்ட பதிவுகளைக் குறிப்பதற்கு ஃபேஸ்புக் ஏற்படுத்திய அமைப்பு பெரும் போர்க்களமாக மாறிவிட்டது. தங்களுக்கு ஒவ்வாத கருத்தை தவறான முறையில், ஒட்டுமொத்தமாக இணைந்து புகாரளித்து நீக்கும் தீவிர வலதுசாரி அலைக்கழிப்பு முறைகளுக்கு ஆன்லைனில் இது வழி ஏற்படுத்தித் தந்துவிட்டது.
தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் பன்னெடுங்காலமாக தங்களுக்கென்று சில படிமுறைத் தீர்வுகளை (அல்காரிதம்) வடிவமைத்து அவற்றின் மூலம் ஒருவர் பொருட்களை வாங்கும் தன்மையினரா என்பதில் இருந்து அவர் போலியான அடையாளத்தில் இயங்கி வருகிறாரா என்பது வரை கணித்து வருகிறார்கள். தற்போது தவறான செய்திகளைப் பரப்புவது அதிகரித்துள்ள நிலையில், மேலும் மேம்பட்ட வழிமுறைகளை உருவாக்கி யார் யார் நம்பிக்கைக்குரியவர்கள் என்று கண்டறியவும் அவர்கள் முயன்று வருகிறார்கள்.
2015 –இல் தாம் பொய்யானது, தவறானது என்றும் நம்பும் பதிவுகளைப் பற்றிப் புகாரளிக்கும் வாய்ப்பினைத் தனது பயனர்களுக்கு ஃபேஸ்புக் நல்கியது. பதிவுகளின் வலது மேற்புற ஓரத்தில் இதற்கான தேர்வு இருக்கும். அதை க்ளிக் செய்து ஆபாசம், வன்முறை, வெறுப்புணர்வைத் தூண்டல், தவறான தகவல் போன்ற காரணங்களுக்காகப் புகார் தெரிவிக்க முடியும்.
“வெகு விரைவில் இதைப் பயன்படுத்திப் பலரும் தாங்கள் ஒரு கருத்தோடு உடன்படாத காரணத்தினாலேயே அது சார்ந்த பதிவுகளைப் புகாரளிக்கத் தொடங்கியதை உணர்ந்தேன். ஏனென்றால் இவ்வாறு அளிக்கப்படும் புகார்களின் உண்மைத்தன்மையை வெளியாரிடம் அனுப்பி சோதிப்போம்” என்கிறார் லியோன்ஸ். அப்போதுதான் இவ்வாறு புகாரளிக்கும் பயனர்களின் நம்பிக்கைத்தன்மையினை அறிவதற்கான வழிமுறைகளை உருவாக்கும் எண்ணம் அவரது குழுவுக்கு உதித்தது.
“ஒரு கட்டுரை பொய்யானது என்று முன்பு ஒருவர் புகார் தெரிவித்திருந்தால்; உண்மைத்தன்மையை அறிபவரை வைத்து அதனை சோதிப்போம். ஒருவேளை அப்புகார் உண்மை என்றால், அந்நபர் வருங்காலத்தில் அளிக்கும் புகார்களை; பொய்ப்புகார்களை அள்ளி வீசும் நபரின் புகார்களை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மதிப்பிடுவோம். இது நாங்கள் பயன்படுத்தும் வழிகளில் ஒன்று” என்கிறார் லியோன்ஸ்.
ஆக, இம்மதிப்பீட்டுப் புள்ளிகள் என்பவை எப்புகார்கள் சரிபார்க்கப்பட வேண்டும் என முடிவுசெய்ய ஃபேஸ்புக் ஏற்படுத்தியுள்ள ஏராளமான படிமுறைத் தீர்வுகளில் ஒன்றே ஆகும். இதுபோன்று மேற்கொண்டு வேறு எவற்றையெல்லாம் வைத்து ஒரு பயனரது நம்பிக்கைத்தன்மை கணக்கிடப்படுகிறது என்ற கேள்விக்கு அவர் பாதுகாப்புக் காரணங்களைச் சுட்டிக்காட்டி அவற்றை வெளியிட மறுத்துவிட்டார்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்